சேர சோழ பாண்டிய சாம்ராஜ்யங்களின் பெருமைகளைப் பற்றிப் பேசும் பெரும்பாலானவர்களால் தனித்து விடப்படும் பாவப்பட்ட ஒரு சாம்ராஜ்யம் சேர சாம்ராஜ்யம்.😣
சேர நாடு என்றாலே அது கேரளம் தான் என்கிற எண்ணமும் நம்மில் பலருக்கு உண்டு. மேற்குத்தொடர்ச்சி மலைகளின் இருப்பால் போக்கும் வரவும் குன்றி சமஸ்கிருதமும் கலக்க தமிழ் அருகி மலையாளமாக பரிணமித்துவிட்டது என்ற புள்ளியில் நின்று விடுகின்றனர்.
இடைக்காலத்தில் ராஜராஜ சோழனும் சுந்தர பாண்டியனும் பற்பல உயரங்களை எட்டிய காலத்தில் சேரன் என்ன செய்து கொண்டிருந்தான், எங்கிருந்தான் என்கிற கேள்விகள் எழுவது எளிது.
இலக்கியப் பக்கங்களைத் தொட்டவர்களுக்கு சேரன் புதுமை அல்ல! ஆனால் அப்பக்கத்தை தொடாதவர்களுக்கும் கூட ராஜ ராஜனைப் பற்றித் தெரியும். கொஞ்சம் ஆய்வறிவு உள்ளவர்களுக்கும் மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் மகிமை விளங்கும். ஆனால் சேரன் ?
சுந்தரரோடு கயிலை சென்ற சேரமான் பெருமாள் நாயனாருடனும், வீரகேரளர்களுடனும், கேரள வர்மாக்களுடனும் சேரனது வரலாறு முற்றுப் பெற்றதாகவே பலரும் கருதுகிறார்கள்.
ஒருபுறம் இப்படிக் கருத்து நிலவ சேர நாடு என்பது மலை நாடான கேரளம் மட்டும் அல்ல. தமிழகத்தின் மேற்கு மண்டலமான கொங்கு நாட்டையும் உள்ளடக்கியதாகும். சேரனின் தலைநகரமான வஞ்சி நகரம் தற்போதைய கரூர் தான் என்பதும் பல ஆய்வறிஞர்களின் கருத்தாகும். சேரனின் பல பெயர்களில் ஒன்று கொங்கன் என்பதாகும்!
கொங்கு நாட்டின் முதற்குடிகளான கொங்க வேளாளர்கள் சேர வம்சாவளி என்று பல செப்பேடுகளின் வழியே பொதுப்படக் கூறி வந்தாலும் அதற்கான வலுவான சான்றுகளும் இல்லாமல் இல்லை.
குறிப்பாக கொங்க வேளாளர்களில் தத்தமது ஆண் வழி மூதாதையரை அடையாளம் காணும்
கூட்டம் என்னும் கோத்திர முறை பன்னெடுங்காலமாகப் பேணப்பட்டு வருவதினால் பல வரலாற்றுத் தெளிவுகளை அது அளிக்கின்றது.
இடைக்காலக் கல்வெட்டுகள் பலவற்றில் குறிக்கப்பட்டுள்ள கொடைச் செய்திகளிலும் கூட கொடையாளரின் கோத்திரங்கள் தெளிவாகக் குறிக்கப்பட்டுள்ளது. இத்தகைய குறிப்புகளினூடே பல முடிச்சுகளை அவிழ்க்கும் முனைகளும் சேர்ந்தே வெளிப்படுகின்றது.
புதுக்கோட்டை அருகே கொடும்பாளூரில் இருந்து ஆண்டு வந்த சோழர்களோடு மணவுறவு வைத்திருந்த இருக்கு வேளிர் (ஆம்! கபிலர் பாடிய துவாராபதியிலிருந்து வந்து 49 தலைமுறைகள் அரசியற்றிய இருங்கோவேள் ஒருவனின் அதே வம்சாவளி தான்!) சிற்றரச மரபில் வந்துதித்த பூதி விக்கிரம கேசரி எழுப்பிய மூவர் கோயிலில் உள்ள கல்வெட்டுகள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
அவை பூதி விக்கிரமனின் வம்சாவளியையும் பராக்கிரமங்களையும், மகிமைகளையும், வளங்களையும் விவரித்து...அவன் கண்ட மிகப் பெரும் போர் வெற்றிகளையும் நினைவுறுத்துவதாயும் அமைந்திருக்கின்றன.
சமஸ்கிருதத்தில் அமைந்துள்ள அக்கல்வெட்டில் பூதி விக்கிரம கேசரி என்னும் இருக்கு வேள் - தமிழகத்தைத் தலைமை இடமாகக் கொண்டு பெரும் சாம்ராஜ்யங்களை நிறுவி ஆண்டு வந்த பல்லவனையும், வீரபாண்டியனையும், வஞ்சி வேளையும் வெற்றி கொண்டதாகப் பெருமை கொள்கிறான்.
படம் 1: இருக்கு வேளான பூதி விக்கிரம கேசரியின் கொடும்பாளூர் மூவர் கோயிற் கல்வெட்டும் விளக்கமும். நன்றி : Sankara Narayanan G மற்றும் வரலாறு வலைத்தளம். - http://www.varalaaru.com/design/article.aspx?ArticleID=833
இவ்விடம் வஞ்சி வேள் யார் என்னும் கேள்வி உங்களுக்கு எழுந்திருக்குமானால் தலைப்பை சரியாகப் படித்தவர்களுக்கு பதிலும் விளங்கியிருக்கக் கூடும்.
ஆம் வஞ்சி என்பது சேர நாட்டின் தலைநகரமாகும். வேள் என்பது அதன் தலைவனான சேர அரசனைக் குறிப்பதாகும். பொன்னியின் செல்வன் என்பது எப்படி சோழனுக்கு அடைமொழியோ வஞ்சி வேள் என்பது சேரனின் அடைமொழிகளில் ஒன்றாகும் என்பது இவ்விடம் விளக்கம் ஆகிறது!
சரி வஞ்சி வேள் என்னும் சேரருக்கும், கரூருக்கும், கொங்க வேளாளருக்கும் என்ன தொடர்பு?
சரியாக பொ.ஆ. 1217 இல் வீர ராஜேந்திரன் என்னும் சோழ மன்னன் ஆட்சியில் கரூர் அருகே அமைந்துள்ள பழநாகம்பள்ளி சிவாலயத்திற்கு கொடுக்கப்பட்ட கொடைச் செய்தி ஒன்று கிடைக்கின்றது.
அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
"ஸ்வஸ்திஸ்ரீ கோவிராசகேசரி பன்மரான திரிபுவனச் சக்கரவர்த்திகள் சிரீ வீர ராசேந்திர தேவர்க்கு யாண்டு பத்தாவது வீரசோழமண்டலத்து வெங்கால நாட்டுப் பழநாகம்பள்ளி வெள்ளாளில் அந்துவரில் பெருக்கன் வஞ்சி வேளான பெற்றானேன்..."
நாடு - வெங்காலம்
ஊர் - பழநாகம்பள்ளி
குலம் - வெள்ளாளர்
கோத்திரம் - அந்துவர்
பட்டம் - பெருக்கன், வஞ்சி வேள்
பெயர் - பெற்றான்
படம் 2: வஞ்சி வேளான அந்துவன் பெற்றானின் பழநாகம்பள்ளி சிவாலயக் கல்வெட்டு.
நன்றி: தேடலில் பயணித்த அன்புத் தம்பி Vignesh Anthuvan
1) பதிற்றுப்பத்தும் புறநானூறும் கூறும் இரும்பொறை வம்ச சேரர்களின் முதல்வன் அந்துவன் என்பதும்
2) வெள்ளாளர் குலத்தில் அந்துவன் என்றொரு குடித்தலைவனின் பெயரிலேயே தொன்றுதொட்டு கோத்திரம் வழங்கப்படுவதும்
3) அவ்விருவரும் வஞ்சி என்னும் கருவூரை தலைமையிடமாகக் கொண்டவர்கள் என்பதும்
4) இன்றும் அப்பகுதியில் அந்துவன் கூட்டத்து வெள்ளாளர்கள் மிகுந்திருப்பதும்
5) நாகம்பள்ளி அந்துவர்களுக்குக் குலதெய்வமாக மூவேந்தருக்கு எல்லை பிரித்துக் கொடுத்த செல்லாண்டி அம்மனே குலதெய்வமாக அங்கு வீற்றிருக்கிறாள் என்பதும்
6) இருக்கு வேளான பூதி விக்கிரம கேசரி தான் கொன்ற சேரனை "வஞ்சி வேள்" என்றே அழைப்பதும்
கொங்க வெள்ளாளரில் உள்ள அந்துவன் கூட்டத்தார் வீழ்ந்துபட்ட சேர வம்சாவளியினரே என்பதை உறுதிபட உணர்த்துகிறது.
பதிற்றுப்பத்துக் காலமான சங்க காலத்தின் வழியாக இக்காலம் வரையிலும் ஒரு மரபின் இழை தொடர்ந்து பன்னெடுங்காலமாய் உதிரப் பாய்ச்சலில் வந்து பல்கிப் பெருகி வாழ்ந்து கொண்டிருக்கிறது என்பதை தெரியப் படுத்திக்கொள்ளும் நல்வாய்ப்பாகக் இப்பதிவைக் கருதுகிறேன். #மகிழ்ச்சி
"பழமையினால் பெருமை இல்லை; முதுமையினால் சிறுமை இல்லை"
- என்று சங்கரநாராயணன் ஐயா அவர்கள் கூறிய நல்லுரையையும் இத்துடன் சேர்த்தே கூற விழைகிறேன்.
கற்றுத் தெளிந்து நெடுநுண் கேள்வி உடையவனாக அந்துவஞ்சேரல் விளங்கியிருக்கா விட்டிருந்தாலும்,
வஞ்சி வேள் ஒருவன் போர் புரிந்து வீர மரணம் அடைந்திருக்காவிட்டாலும்,
அறவழியில் பொருள் சேர்த்து பெற்றான் சிவனார் ஆலயப்பணிக்குக் கொடையளிக்காது விட்டிருந்தாலும்...
- நமக்கு மேற்கூறிய சாசனங்கள் இல்லை. வரலாறும் இல்லை.
வரலாறு வெற்றுப் பெருமையை மட்டும் தருவதற்கல்ல! பெருமைக்குரிய செயல்களே வரலாற்றில் இடம்பெருகிறது என்பதே இதனால் பெறப்படும் செய்தி. தான் செய்யும் பெருமைக்குரிய செயல்கள் தனக்குமட்டுமின்றி பின்னால் வரப்போகும் தலைமுறைகள் மொத்தத்திற்கும் வழிகாட்டியாய் அமைகிறது.
நாமும் நம் முன்னோர் காடிய நல்வழியில் நடப்போமாக!
பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
கருமமே கட்டளைக் கல்.
- அந்துவன் தனேஷ்.