சேரர் வரலாற்றில் அவர்களது தலைநகரம் எது? அவர்கள் எத்தனை கிளையினர்? அவர்களின் வழித்தோன்றல்கள் யார்? என்ற கேள்விகள் எழாத ஆய்வாளர்களே இருக்க முடியாது.
இன்று கொங்கு மண்டலம் என அறியப்படும் மேற்கு தமிழகமே சேரனின் நாடு தான். கொங்கன் என்றும், கொல்லிப் பொறையன் என்றும், அமரவாதி என்னும் ஆண்பொருநை ஆற்றுக்கு உரியவன் என்றும் அறியப்படுபவர்கள் சேரர்கள் என்பதால் சேரனின் மையமாக விளங்கியதே கொங்கு நாடு தான் என்பது விளங்கும்.
வஞ்சி நகரம் நான்கு என்று கொங்கு நாட்டு ஆவணங்கள் கூறுகின்றன. அவற்றில் இந்த அமராவதி ஆற்றங் கரையில் தான் கரூவூர், தாராபுரம், மூலனூர் என்ற மூன்று வஞ்சி நகரங்கள் இருக்கின்றன.
சேரன்/சேரலன், அந்துவன், ஆதன், மலையன், பவளன், வில்லி, ஆந்தை, பனையன் என்கிற கொங்கு நாட்டு வேளாளர்களின் கோத்திரங்கள் சேர அரச வரலாற்றில் நெருங்கிய தொடர்புடைய கோத்திரங்கள் ஆகும்.
கம்பர் காலத்தில் குலோத்துங்கனோடு ஏற்பட்ட முரண்பாட்டால் வேளாளர்கள் கொங்கிற்குள் குடியேறும் முன்னரும் இங்கு வேளாளர்கள் இருந்தார்கள் என்பதற்கு சேரர் மரபினோடு வந்த இக்கோத்திரத்தாரும் அவர்களின் வரலாறுகளுமே சான்றாதாரமமாக விளங்குகின்றன.
இவர்களில் அந்துவன் கூட்டத்தினர் பழம் வஞ்சியான கரூர் பகுதியில் காணியாளர்களாக இன்றும் பெருவாரியாக வாழ்ந்து வருகின்றனர். "வஞ்சி வேள்" என்னும் பட்டம் கொண்டிருக்கும் இவர்கள் அந்துவஞ்சேரல் என்பானின் வழியினரே என்பதைப் பலவழிகளிலும் காட்டுகிறது.
கரூர் "தென்னவன் வஞ்சி வேளான இரவி குவாவன்", ஈரோடு கொல்லம்பாளையாம் "தென்னவன் பேரரையனான வஞ்சி வேள் தாழி" என்னும் கல்வெட்டுகளால் இவர்கள் ஒன்பதாம் நூற்றாண்டு அளவில் வீரகேரளரின்(சேரன் கூட்டத்தார்) சமகாலத்தில் கரூரைத் தலைமையாகக் கொண்டு தனி அரசாக விளங்கி வந்துள்ளனர் என்பது விளங்கும்.
மேலும் இவர்களை "வஞ்சி வ்ருஷ்ணி" என்று சம்ஸ்கிருத க்ரந்தப் பகுதியில் குறிப்பிட்டிருப்பது மிகச் சிறப்பானதொரு வரலாற்றுக் குறிப்பாகும்.
தற்சமயம் நமக்கு கிடைத்திருக்கும் மற்றுமொரு சிறப்பானதொரு கல்வெட்டுக் குறிப்பைப் பற்றியதே இப்பதிவு.
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கிப் பகுதியில், மணமேல்குடி என்னும் ஊரில் பொ.ஆ. 1210 , குலசேகர பாண்டியன் ஆட்சியில் பொறிக்கப்பட்டதாகக் கிடைத்திருக்கும் இக்கல்வெட்டில் புதிய தகவல் ஒன்றும் கிடைத்துள்ளது.
நானாதேசி விண்ணகர் தெற்கு மற்றும் வடக்கு மணமேல்க்குடி நகரத்தாரும் - "அந்துவன் மகாதேவி" சதுர்வேதிமங்கலத்துச் சபையோரும் சேர்ந்து மணமேல்குடி பொன்னகர் பெருமாள் கோயிலிற்காக அளித்த கொடை பற்றிய செய்தியை கல்வெட்டு விளம்புகிறது.
"அந்துவன் மகாதேவி" எனும் அரசியாரின் பெயரில் இக்கல்வெட்டின் காலத்திற்கு பலகாலம் முன்னரே இந்த சதுர்வேதிமங்கலம் உருவாக்கப்பட்டு நிர்வகிக்கப்பட்டு வந்திருக்க வேண்டும். உருவாக்கியோரின் காலமும், யார் ஆட்சியில் உருவாக்கப்பட்டது என்பதும் நமக்கு அறிய கிடைக்கவில்லை.
அரசியாரின் பெயரில் உள்ள "அந்துவன்" என்கிற முன்னொட்டு அவர் சேர அரச வம்சமான அந்துவர் வழியில் உதித்தவள் என்பதாகவோ, அல்லது சேர அரசர் வழிவந்த அந்துவன் கோத்திர அரசனொருவனுக்கு வாக்கப்பட்டதாகவோ குறித்திருக்கலாம்.
இதே போல, சங்க காலத்தில் மையூர் கிழான் மகள் "அந்துவன் செள்ளை" என்பவரும் குறிக்கப்பட்டுள்ளது அறியக் கிடைக்கிறோம். இவர் குட்டுவன் இரும்பொறையின் மனைவியாரும் இளஞ்சேரல் இரும்பொறையின் தாயாரும் ஆவார் என்பதும் அறிவோம். அவரது பெயருக்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும் அந்துவனின் தாய் என்பதாகக் குறிப்பதே பல்லாற்றானும் பொருத்தமாகவுள்ளது.
இந்த இரும்பொறை வம்சம் யார் என்று கேட்டால் - வஞ்சி முற்றத்துத் துஞ்சிய நெடுநுண் கேள்வி "அந்துவஞ்சேரல் இரும்பொறை" மகன் செல்வக்கடுங்கோ வாழியாதன் மகன் பெருஞ்சேரல் இரும்பொறை மகன் இளஞ்சேரல் இரும்பொறை, இவர்களோடு மாந்தரஞ்சேரல் இரும்பொறை என விரிகிறது. இது பற்றி தனி பதிவாகப் பார்ப்பாம்.
ஆக "அந்துவன் மகாதேவி" என்னும் நமது நமது அரசியாரின் புகழ் சொல்லும் பெயர் அமைந்த மணமேல்குடி கல்வெட்டு கொங்கு வெள்ளாள வஞ்சி வேளார் வழி வந்த அந்துவன் கூட்டத்தார் ஒவ்வொருவருக்கும் தம் நெடிய அரச பாரம்பரியத்தை நினைவுறுத்தும் மற்றுமொரு சிறப்பாக என்றென்றும் அமைந்திருக்கும் என்பதில் ஐயமில்லை!
- அந்துவன் தனெஷ்
#கொங்கர் #அந்துவர் #வஞ்சிவேளிர் #வஞ்சிவ்ருஷ்ணி #வேளாளர் #அந்துவஞ்சேரல் #அந்துவன்செள்ளை #அந்துவன்மகாதேவி