புதன், 18 செப்டம்பர், 2024

யது குல சேரர் (எனும்) வஞ்சி வேள் அந்துவர்


தமிழகத்தின் மூவேந்தர்களான சேர சோழ பாண்டியரை முறையே அக்னி வம்ச, சூரிய வம்ச, சந்திர வம்சம் என்று சொல்வதுண்டு.


இதில் சேரர்களை அக்னி வம்சம் என்று சொல்லும் நடைமுறை பற்றிய வலுவான ஆதாரங்கள் இடைக்கால இலக்கியங்களிலேயே கிடைக்கிறது. கல்வெட்டுகளில் செப்பேடுகளில் இடைக்கால சேரர்கள் தங்களை வீரகேரளர் என்றும் சந்திர-ஆதித்ய வம்சம் என்றும் தங்களை அடையாளப்படுத்திக் கொள்கின்றனர்.


இதுவே சங்க கால இலக்கியங்களை திருப்பிப்பார்த்தால் முச்சுடராகிய சூரிய சந்திர அக்னி என்கிற வழக்கிற்கு மாறாக அக்னியின் இடத்தில் மழையை வைத்துப் பாடப்படுகிறது. சேர வம்சத்து இளங்கோவடிகள் இயற்றிய சிலப்பதிகார மங்கல வாழ்த்துப் பாடல் ஞாயிறு போற்றுதும்! திங்கள் போற்றுதும்! மாமழை போற்றுதும்! என்று இந்த வழக்கத்தை எடுத்துக் காட்டுகிறது.


மேலும், சேர வம்சம் இரண்டு கிளைகளாக செயல்பட்டு வந்ததை நமக்கு சங்க இலக்கியமான பத்துப்பாட்டு தெளிவிக்கின்றது. உதியன் சேரல் ஆதன் மற்றும் அந்துவன் சேரல் இரும்பொறை என்போரால் இந்த இவ்விரு மரபுகளும் எழுச்சி பெற்றதை நிறுவுகின்றன. பரசுராமரோடு தொடர்புடையோராக வரும் அக்னி வம்சத்துக்கும் இவர்களுக்குமான தொடர்பு சரியாக நிறுவப்படவில்லை. ஆனால் இவர்கள் சந்திர வம்சத்து கிளையான யது வம்சத்தவர்கள் என்பதற்கு தெளிவான கருத்துக்கள் வரலாறு நெடுகிலும் பதிவு செய்யப்பட்டு வந்துள்ளது.


குறிப்பாக கொங்கு வேளாள கவுண்டர்களில் அந்துவன் கோத்திரத்தார்கள் சங்ககால இரும்பொறை மரபினை தோற்றுவித்த அந்துவன் சேரல் இரும்பொறை வழியினர் என்பதற்கு சான்றாதாரங்கள் அள்ளக் கிடைக்கின்றன.


வீரகேரளராக ஆண்ட சேரர்கள் கொங்கு வேளாளர்களில் சேரன் கோத்திரத்தவர்கள் என்பதும் எனது கூற்று. இவர்களே உதியன் மரபினர் என்பதும் எனது கூற்று. அந்துவன் மற்றும் சேரன்/சேரலன் என்னும் இரண்டு கோத்திரங்களைத் தவிர சேரரோடு தொடர்புடைய மற்றைய கோத்திரங்கள் - ஆதன்/ஆதி, பனையன், வில்லி, பவளன் ஆகும். இவர்களை பற்றிய மேலதிக ஆய்வு தேவை.


வஞ்சி வேளிர்களான அந்துவர்கள் = யது குலத்து சேரர்களே என்று இதுவரை கிடைத்த ஆதாரங்களின் படி நிறுவுவதே இந்த பதிவு. அதற்கான ஆதாரங்களை வரிசைக் கிரமமாக பார்ப்போம்.


1) சேர ராஜக்கள் பரம்பரையில் முதலாகக் குறிக்கப்படுகின்றவர் - யது குலச் சேரன். 'எது' என்பது 'யது' என்பதின் தமிழ் வடிவம்.



2) சேரன் ஆனவன் இலாட வளநாட்டில் யாதவர்களான நந்த கோபாலர்களின் குடியிருப்பில் பிறந்தவன் எனச் சொல்லும் சோழன் பூறுவ பட்டயம். இலாடபுரி என்று ஒரு கல்வெட்டில் இன்றைய தாராபுரம் பதியப்பட்டுள்ளது. தாராபுரம் சேரர் தலைநகரமாக விளங்கிய நான்கு வஞ்சி நகரங்களுள் ஒன்றாகும். மற்றவை கரூர், மூலனூர், சேலம் ஆகும். இவை சேரனின் அமராவதி ஆற்றங்கரை நகரங்கள்.



3) சேரனுக்குக் 'கொங்கன்' என்பது ஒரு பெயர். கொங்கர் என்றால் கொங்கு நாட்டை உடையவர் என்று பொருள். பதிற்றுப் பத்து 22 - 'ஆகெழு கொங்கர்'  - ஆநிறைச் செல்வம் உடைய கொங்கர் என்கிறது.



4) அகத்தியரோடு தென்னாடு வந்த வேளிர்கள் கிருஷ்ணர்(நெடுமுடியண்ணல்) வழியினர்(வ்ருஷ்ணி குலம்) என்றும் அவர்கள் காடு கொன்று நாடுகளை உண்டாக்கியதைப் பற்றியும் நச்சினார்க்கினியரின் தொல்காப்பிய உரையில் சொல்லியிருப்பது.


5) கண்ணன் யாதவ குலத்தில் வ்ருஷ்ணி என்னும் கிளை மரபில் உதித்தவன். இந்த வ்ருஷ்ணிகளை விராத்தியர் என்ற குறிப்பையும் நோக்க! விராத்தியர்களின் விராடபுரம் என்பதே தமிழில் இலாடபுரி என்று தாராபுரத்தைக் குறித்தது. அது சேரனின் நான்கு வஞ்சிகளின் ஒன்றாகும் முதல் சான்றில் உலாச் சேரன் பிறந்தது இலாடபுரி என்று குறித்துள்ளது.






6) யாதவ கண்ணனின் மாமன் கம்சனின் குலம் அந்தகர் குலம். இவர்களும் மூலத்தில் யாதவரே. அந்தகர் - வ்ருஷ்ணி இரண்டும் எப்போதும் ஒன்றாகவே குறிப்பிடப்படுகின்றன.

சம்புகன் (Shambuka) என்ற வடசொல் தமிழில் 'சம்புவன்' ஆவது போல
அந்தகர் --> அந்துவர் என்றாவதற்கு மொழியியல் வழக்கம் உள்ளது.

ஆனால் இந்த குறிப்பை நிறுவ மேலதிக ஆதாரங்கள் தேவை.

எப்படிக் கொண்டாலும் வ்ருஷ்ணி என்பது சிறப்பாக கிருஷ்ணர் வழியினரையும், பொதுவாக வேளிரையும் குறிப்பதே ஆகும். அந்தக-வ்ருஷ்ணிகள் யது வம்ச கிளைகளே!


7) வஞ்சி வேள் ரவி குஹாபன் கல்வெட்டு - 'வேளிர்' என்பதற்கு சமமான வடசொல் 'வ்ருஷ்ணி' என்பதற்கு சான்றாக உள்ளது.

வஞ்சி வ்ருஷ்ணி = வஞ்சி வேளிர்.

இது அகத்தியோரொடு வந்த கண்ணன் வழியினரே வேளிர் என்று சிறப்பாக நச்சினார்க்கினியர் சொன்ன சிறப்புரையோடு ஒபபிட்டு நோக்கத்தக்கது.



8) வஞ்சி வேள் என்பானை போரில் கொன்றதை விதந்தோதிக் கொள்ளும் கொடும்பாளூர் இருங்கோ வேளிர் வழியினனான பூதி விக்கிரம கேசரி.

பல்லவர், பாண்டியரோடு இணையாக வைத்து வஞ்சி வேளை சொல்வது... வஞ்சியை தலைநகராகக் கொண்ட சேரரையே கூறிக்கும் என்பது ஆய்வாளர்கள் கூற்று.


9) வஞ்சி வேந்தன் என்று சேரனை குறிக்கும் நிகண்டுகள் (படத்தில் பிங்கல நிகண்டு).

வஞ்சி என்பது கருவூர் நகரைக் குறிப்பது. கருவூரைத் தலைநகரமாகக் கொண்டோர் சேரர்கள். இது அவர்களது கொல்லி மலைக்கும் அமராவதிக்கும் அருகில் அமைந்த நகரமாகும்.

அகத்தியரோடு தென்னாடு வந்த வேளிர்களில் தலைசிறந்த மூவரே வேந்தராக முடிசூடினர். பின்னாளில் சளுக்கியர், ஒய்சளர், பல்லவர், கங்கர், கடம்பர் முதலிய வேளிர்கள் வேந்தரான போது சேரர்கள் வேளிர் சிற்றரசராகச் சுருங்கினர்.



9) சேரர்கள் வேந்தர் நிலையில் இருந்த வேளிரே என்பதற்குச் சங்கச் சான்று- புறநானூறு-13 ஆம் பாடல்.

சங்க காலத்தில் சோழ மன்னனின் யானை மதம் பிடித்து கருவூருக்குள் வந்த போது அந்துவஞ் சேரல் இரும்பொறை தனது வேண்மாடத்தில் (வேளிர் மாளிகை = அரச மாளிகை) நின்று கொண்டு பேசிக் கொண்டதாக வரும் புறநானூற்றுப் பாடல் குறிப்பில் உள்ளது.

 
10) வஞ்சி நகரான கரூவூர் அருகே சேரனுக்குரிய அமராவதி ஆற்றங்கரையில் பழநாகம்பள்ளி என்னும் ஊரைக் காணி கொண்டுள்ள அந்துவர்கள்

இரண்டு பாடல்களிலும் முதற்காணியாக நாகம்பள்ளியே வருகிறது நாகம்பள்ளி வஞ்சி நகரான கருவூரின் தென் பகுதி ஆகும். அதனால் தென் வஞ்சி என அழைக்கப்பட்டது.



11) வஞ்சி வேள் எனும் பட்டமுடைய கொங்கு வேளாள அந்துவர்கள் - பழநாகம்பள்ளி எனும் மலைக்கோவிலூர் சிவன் கோயில் கல்வெட்டு.

அந்துவன் என்கிற கோத்திரப் பெயரும் - வஞ்சி வேள் என்ற பட்டமும் இவர்கள் சேர வழியினர் தான் என்று அறுதியிட்டுக் கூறும் சான்றாக அமைந்துள்ளது.

வஞ்சி வ்ருஷ்ணி என்று இரவி குஹாபனாகிய சேரனை அழைக்கும் மேற்கூறிய சான்று-7 உம் இதே கரூவூரிலேயே கிடைப்பதும் இணைத்துப் பார்க்கத் தக்கது.



12) கொங்கு வேளாள அந்துவர்கள் வஞ்சி நகரை ஆண்டது பற்றிக் கூறும் கீரனூர் இலக்கியம். தென்வஞ்சி நகராள்பவர் என்று அந்துவ குல பெற்றாக் கவுண்டர் மகன் செல்லப்ப கவுண்டரைப் பாடுகிறது.
13) மூவேந்தருக்கு எல்லை பிரித்துக் கொடுத்த ஸ்ரீ செல்லாண்டி அம்மனே அந்துவர்களின் குலதெய்வமாக அருள்பாலிக்கிறாள்.

முன்பு சேர-சோழ-பாண்டிய அரசர்களிடையே எல்லைப் பிரச்சனை வரவே... மூன்று நாட்டுக்கும் மையப்புள்ளியான மதுக்கரை(மதில் கரை) எனும் ஊரில் நின்று எல்லை பிரித்துக் கொடுத்த செல்லாண்டி அம்மனை அவள் அருளோடு மூன்று பாகமாகப் பிரித்து...
பாண்டியர் தலைப் பாகத்தை வைகைக் கரையான சிம்மக்கல்லிலும்,
சோழர் கால் பாகத்தை காவிரிக் கரையான பாண்டமங்கலத்திலும்,
சேரர் இடைப்பாகத்தை ஆண்பொருநை என்னும் அமரவாதிக் கரையிலும் கோயில் எழுப்பி வழிபட்டு வந்ததாக வரலாறு.

அது நாகம்பள்ளி ஸ்ரீ செல்லாண்டி அம்மன் கோவிலே என்பது எனது கூற்றாகும்.

ஸ்ரீ செல்லாண்டியம்மனே... கீரனூரில் ஸ்ரீ செல்வநாயகி அம்மன்,  மோடமங்கலத்தில் செல்லி அம்மன் என்ற பெயர்களுடன் அருள் பாலிக்கிறாள்.


14) மேற்கண்ட சான்றுகளின் படி இந்த வஞ்சி வேளிர்கள் அந்துவரே எனப் பெறப்படுகிறது. இந்த வஞ்சி வேளிருக்கு 'மன்றாடி' என்கிற பட்டம் உள்ளதற்கு கடத்தூர் மருதீசர் கோயில் கல்வெட்டு சான்றாகிறது. இது வஞ்சி வேளிரை ஆநிறைச் செல்வத்திற்கு உரியவர் என்பதை நிறுவுகிறது.

மன்றாடி என்பது ஆநிறைச் செல்வம் மிக்க குடித் தலைவனுக்கு வழங்கப்படும் அரச பட்டமாகும். கொங்கு நாடு முழுக்க மன்றாட்டு எனும் ஆட்சி முறையும் கொங்கு வேளாளர்களுக்கு மன்றாடி என்கிற பட்டம் சிறப்பாக இருந்துள்ளது. இது கொங்கு நாடு முல்லைப் பாங்கான ஆநிறை மேய்ச்சலுக்கு உகந்த பகுதி என்பதற்குச் சான்றாகும். 

வஞ்சி வேள் மன்றாடி(அந்துவன்), காங்கேய மன்றாடி(பொருளந்தை), பல்லவராய மன்றாடி(செங்கண்ணன்), சர்க்கரை மன்றாடி(பயிரன்), மசக்காளி மன்றாடி(புல்லன்), உலகுடைய மன்றாடி(சாத்தந்தை), தேவ மன்றாடி(குழாயன்), வாலை மன்றாடி(பொன்னன்) ஆகியோர் கொங்கு வேளாளர்களில் மன்றாடிப் பட்டம் கொண்ட வேளிர்கள் ஆவர்.



வஞ்சி வேள் என்று மொத்தம் 10 கல்வெட்டுக்கள் கிடைக்கின்றன. அவற்றில் 3 மட்டுமே இங்கு எடுத்தாளப்பட்டுள்ளது. அனைத்து கல்வெட்டுகளையும் படிக்க - இங்கே அழுத்தவும்!


மேற்கூறியுள்ள ஆதாரங்களினால் பெறப்படுவது:

யது குல கிளை வம்சமான கிருஷ்ணன் பிறந்த வ்ருஷ்ணி குலத்தில் உதித்து...
தமிழ் முனிவன் அகத்தியரோடு தென்னாடு வந்து...
அமராவதி ஆற்றுப்படுகையில் காடு கொன்று நாடாக்கி...
வஞ்சி எனும் கரூவூர் நகரம் தலைநகராக கொங்கு நாட்டை ஆண்டு...
மன்றாடி என ஆநிறைச் செல்வங்களுடன் காணிகள் பல கண்டு...
கங்கை குலமான கொங்கு வேளாள கவுண்டரில் மற்ற வேளிருடன் ஐக்கியமான...
சங்ககால சேரரின் கிளையான இரும்பொறை வம்சத்தினரே...
வஞ்சி வேளிர்களான அந்துவன் கோத்திரத்தார்!

யது குல சேரர் = வஞ்சி வேள் அந்துவர்!

----------------------------------------------------- XXX ------------------------------------------------------

#அந்துவர் #வஞ்சிவேள் #சேரர் #இரும்பொறை
#யாதவர் #வ்ருஷ்ணி #கிருஷ்ணன் #மன்றாடி
#கொங்கர் #வேளாளர் # கவுண்டர் #கங்கை குலம் #வேளிர்


யது குல சேரர் (எனும்) வஞ்சி வேள் அந்துவர்

௳ தமிழகத்தின் மூவேந்தர்களான சேர சோழ பாண்டியரை முறையே அக்னி வம்ச, சூரிய வம்ச, சந்திர வம்சம் என்று சொல்வதுண்டு. இதில் சேரர்களை அக்னி வம்சம் என...