திங்கள், 1 பிப்ரவரி, 2021

வஞ்சி வேள் - அந்துவன்! பதிவு #2 - “வஞ்சி வ்ருஷ்ணி எனும் வஞ்சி வேள்”

தென்னகத்தை ஆண்ட மூன்று பெரும் வேந்தர்கள் சேரர், சோழர், பாண்டியர். இமயத்தில் முதன் முதலில் தமது அரசு சின்னமான வில்லைப் பொறித்த பெருமைக்கும் குமரி முதல் இமயம் வரை ஒரு மொழி வைத்து பாரதத்தை ஆண்ட சிறப்புக்கும் உரியவர்கள் சேரர்கள்.

சேர அரசர்கள் பல கிளையினர் என்றும் அவர்களில் இருபெரும் கிளையினரில் மேலை மலை நாட்டை ஆண்ட சேரர்கள் உதியன் மரபினர் என்றும்  கீழைக் கொங்கு நாட்டை ஆண்ட சேரர்கள் அந்துவன் மரபினர் என்றும் அறிஞர் கூறுவர்.

உதியன் மரபினர் வீரகேரளர் என்றும் அந்துவன் மரபினர் இரும்பொறையர், வஞ்சி வேளிர் என்றும் அறியப்படலாயினர். தற்காலத்தில் இவ்வீரகேரள மரபினர் சேரன்/சேரலன் கூட்டம் என்றும் பொறையர்/வஞ்சி வேளிர் மரபினர் அந்துவன் கூட்டம் என்றும் காணியாளராகி குடி பெருகி கொங்க வேளாளரில் தனிக் கோத்திரங்களாக விளங்கி வருகின்றனர்.

இதுவரை ‘வஞ்சி வேள்’ என்னும் பட்டம் கொண்ட இச்சேர மரபினரின் கல்வெட்டுகள் பல தமிழகத்தில் கிடைத்துள்ளன. அவற்றுள் கொங்கராகிய சேரர்களின் தலைநகரிலேயே கிடைக்கப்பட்ட கல்வெட்டுகள் மிகவும் முக்கியமானது.

பதிவு #1 -இல் (https://andhuvan.blogspot.com/2019/12/blog-post.html) கொடும்பாளூர் இருக்கு வேள் மரபினர் வீழ்த்திய வஞ்சி வேள் என்ற சேர அரசனைபற்றியும் கொங்க வேளாள வஞ்சி வேள் அந்துவர் மரபினையும் பற்றிய இரு கல்வெட்டுக்களைப் பார்த்தோம்.

இந்த வஞ்சி வேளிர் பெருமை பற்றி சொல்லும் மற்றொரு முக்கியமான கல்வெட்டு பற்றிய பதிவு இது!

கல்வெட்டின் காலம்: 9 ஆம் நூற்றாண்டு

அரசன்: தென்னவன் வஞ்சி வேள் இரவி குவாவன் (சேரன்)

கல்வெட்டு:

“ஸ்ரீ தென்னவன் வஞ்சி வேளாஇன-

இரவி குவாவன் மணவாட்டி

நிறந்தேவி வஞ்சி வேளார்க்கேய்

ஐம்பது பொன் குடுத்துப் பு-

துப் பெருவாய்க் கீழக்குடையூர் மு-

ருகத்தரைக் கடறு சாற்றிய காற்செய்யு-

ம் விலைக்குக் கொண்டிவ்வூர்த் திருமூ-

லட்டானத்து மாதேவர்க்கு ஒரு நொந்தாவி-

ளக்கினுக்கும் திருவமிர்தினுக்குமாகக் கு-

டுத்தாள் நிறந்தேவி பந்மாஹேஸ்வர காவல்

பாத3 நிவர்த்தநஸ்யாதா3 ச்ச2 த்ரக்3 ரா மே பி

நாகிநே வஞ்சிவ்ரிஷ்ணேகு3 ஹா4 ப4 ஸ்ய தே3-

வி தே3வீதி கீர்த்திதா ஸ்வஸ்தி”

விளக்கம்:

கருவூரில் கீழக்குடையூர் என்னும் ஊரின் திருமூலட்டானத்து மகாதேவர்க்கு நந்தா விளக்கு எரிக்கவும், திருஅமுது படைக்கவும் வஞ்சி வேளின் மனைவி நிறந்தேவியார் விலைக்கு நிலம் வாங்கிக் கொடுத்த செய்தியைக் கூறுகிறது இக்கல்வெட்டு.

துணை: ஆவணம் இதழ்-18, 2007, பகுதி 11-4, பக்கம் 31-32

கல்வெட்டின் சிறப்பு:

கல்வெட்டு தமிழ் மற்றும் சம்ஸ்கிருதத்தில் இருமொழிக் கல்வெட்டாய் அமைந்திருப்பது சிறப்பாகும்.

மேலும் ‘வேள்’ என்னும் தமிழ் சொல்லுக்கு இணையாக சம்ஸ்க்ருதத்தில் 'வ்ருஷ்ணி' என்று குறித்திருப்பது தனிச் சிறப்பு உடையதாகும்.

இக்குறிப்பு நமக்கு இரண்டு செய்திகளை விளக்குவதாக இருக்கலாம்.

1) ‘வ்ருஷ்ணி’ என்பதற்கு வடமொழியில் ஆண்மை மிக்கவன் என்று பொருள்படும். வேள் (ஒளிபொருந்தியவன்) என்னும் சொல்லுக்கு இணையாக இச்சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது சரியே. அரச நிலையைக் குறிக்க இவ்விரு சொற்களும் பயன்பட்டுள்ளதாக அறியலாம்.

2) ‘வ்ருஷ்ணி’ என்பது மாயோன் ஆகிய திருமால் அவதாரம் செய்த யது குல வம்சத்தின் ஒரு கிளையின் பெயரும் ஆகும்.

துவராபதிப் போந்து நிலங்கடந்த நெடுமுடியண்ணல் வழிக்கண் பதினெண்குடி வேளிரையும் அருவாளரையும் கொண்டு போந்து”

- நச்சினார்க்கினியர் (தொல்காப்பியம் பாயிர உரை)

‘‘இது மலயமாதவன் நிலங்கடந்த நெடுமுடியண்ணலுழை நரபதியருடன் கொணர்ந்த பதினெண்வகைக் குடிப்பிறந்த வேளிர்க்கும் வேந்தன் தொழில் உரித்தென்கிறது.’’

- நச்சினார்க்கினியர் (தொல்காப்பியம், அகத்திணை 32 ஆம் சூத்திர உரை)

மேற்காட்டிய நச்சினார்க்கினியர் உரை வழி நோக்கின் ‘வ்ருஷ்ணி’ என்பது கண்ணபிரான் வழி வந்த வேளிர் வம்சம் என்ற பொருளும் தொக்கி வருவது அருஞ்சிறப்பாகும்.

இதற்கு வலு சேர்க்கும் விதம் சேரனைப் பற்றிய பழங்கதைகள் சேரனை ஆநிறைச் செல்வங்களுக்கு உரியவனாகச் சிறப்பிக்கப் படுவது உற்றுநோக்குதற்கு உரியதாகும்.

“சேர நாடு வேழம் உடைத்து”

“சோழ நாடு சோறு உடைத்து”

“பாண்டி நாடு முத்து உடைத்து”

“தொண்டை நாடு சான்றோர் உடைத்து”

என்னும் வரிசையில் “கொங்கு நாடு ஆ உடைத்து” என்று மொழிவர் சான்றோர்.

“ஆகெழு கொங்கர்” (பதிற்றுப்பத்து - 28), “கொங்கர் ஆபரந்தன்ன” (பதிற்றுப்பத்து - 77) என்னும் சங்கப் பாடல்களும் இச்சிறப்பை எடுத்து இயம்புகின்றன.

தற்காலத்திலும் கொங்க மாடுகள் / கங்க மாடுகள் என்னும் காங்கேய நாட்டு மாடுகள் உலக அளவில் தம் அழகிற்கும், வலிமைக்கும் பிரசித்தி பெற்றவை என்பது ஒப்ப நோக்கத்தக்கது.

"சோழன் பூர்வ பட்டையம்" என்னும் பழஞ்சுவடிச் செய்தி ஒருபடி மேலே போய் “இலாட வளநாட்டில் நந்தகோபால பாடியில் உலாச் சேரன் பிறந்தான்” என்று அறிவிக்கிறது.


 
புலிமான் கோம்பையில் கிடைத்த காலத்தால் பாரதத்தின் மிகப்பழமையானதும் முதன்மையாந்துமான பிராமிக் கல்வெட்டு ஆகோளில் இறந்து பட்ட “கல்பேறு அதியன் அந்துவன்”. (கல்பேறு - ஆநிரை பேறு) என்று பசுச் செல்வம் மிக்க அந்துவன் ஒருவனைக் குறிப்பதை மற்றொரு பதிவில் (https://andhuvan.blogspot.com/2020/02/blog-post.html) பார்த்தோம்.


மேலும் கோயமுத்தூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே கடத்தூரில் மருதீசர் கோயிலில் கிடைக்கும் 13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அரிய கல்வெட்டு ஒன்றும் “கடத்தூர் மன்றாடி வஞ்சி வேள்” என்பவன் தூண் செய்து அளித்தது பற்றிக் கூறுகிறது. மன்றாடி என்பது ஆநிறை ஓம்பும் சமூகத்தில் உண்டான ஆட்சி அரச பொறுப்பு என்பது அறிஞர்கள் கூற்று.




இச்செய்திகள் எல்லாம் கொங்கு நாட்டைத் தலைமையாகக் கொண்டு ஆண்ட வஞ்சி வேளிர்களான சேர மரபினர் ஆநிறைச் செல்வம் மிக்கவர்கள், கண்ண பிரான் வழிவந்த வ்ருஷ்ணி குலத்துடன் சம்பந்தப்பட்டவர்கள் என்பதும் அதன் வழியே கொங்க வேளாள அந்துவர்களின் வரலாறு மிகவும் அரியதொரு தொடர் இழையைக் கொண்டது  என்பதும் ஒருவாறு ஊர்ஜிதம் ஆகிறது.

நன்றி: ஜெய்வந்த் (ஆவணம் இதழ் சுட்டியதற்கு)

"நன்றே நம்பிக் குடிவாழ்க்கை நமக்கிங் கென்னோ பிழைப்பம்மா!"

- அந்துவன் தனேஷ்

யது குல சேரர் (எனும்) வஞ்சி வேள் அந்துவர்

௳ தமிழகத்தின் மூவேந்தர்களான சேர சோழ பாண்டியரை முறையே அக்னி வம்ச, சூரிய வம்ச, சந்திர வம்சம் என்று சொல்வதுண்டு. இதில் சேரர்களை அக்னி வம்சம் என...