புதன், 31 ஆகஸ்ட், 2016

அந்துவ குலத்தார் காணியாட்சி தெய்வங்கள்

அந்துவ குலத்தார் காணிகள் பல பெற்று சீர்மிக வாழ்ந்து வந்த போதும் தமது குலதேவதையை மறவாமல் வணங்கி வருகின்றனர். குலதெய்வமே குலம் தழைக்கவும், தன் பிள்ளைகள் நலமிக பெற்று விளங்கவும் முதன்மையாய் நிற்கிறது என்பது பெரியோர் வாக்காகும். அதனால் குல தெய்வ வழிபாடு மிக இன்றியமையாதது ஆகும்.

நமது கோத்திரத்தாருக்கு செல்லாண்டி அம்மனே முதற் குல தெய்வமாக விளங்கி வருகிறாள். ஒரு சில காணிகளில் உரிமை பெற்ற வகையில் அக்காணி தேவதையையும் தமது தெய்வமாக ஏற்று வழிபட்டு வருகின்றனர்.

செல்லாண்டி அம்மன்,  செல்வநாயகி, செல்லி அம்மன், செல்லி ஆயி,, செல்வி என்பன ஒருபொருள் கொண்ட பல பெயர்கள் ஆம்.

காணியாட்சிக் கோவில்கள்:


  • நாகம்பள்ளி - செல்லாண்டி அம்மன்
        (உடன் ஆதி, சாத்தந்தை, பூச்சந்தை கூட்டத்தாருக்கும்)



அந்துவன் குலத்தார் ஆதி காணி வெங்கால நாட்டில் கரூவூர் அருகிலுள்ள நாகம்பள்ளி ஆகும். இவ்வூரின் பழமை பற்றி பழநாகம்பள்ளி என்றழைக்கப் படுகிறது. அமராவதி என்னும் ஆண்பொருணை ஆற்றங்கரையில் அமைந்து செல்லாண்டி அம்மன் என்னும் நாமம் கொண்டு தம் குல மக்களுக்கு அருள்பாலிக்கிறாள் அன்னை.

  • கீரனூர் - செல்வநாயகி அம்மன்
        (உடன் ஆதி, காடன், தேவந்தை, கீரன், விளையன் கூட்டத்தாருக்கும்)


அந்துவன் குலத்தார் பழங்காணிகளில் மற்றொன்று காங்கேய நாட்டு கீரனூர் ஆகும். இங்கு தாயார் செல்வநாயகி என்னும் பிரபல நாமம் தரித்து தம் மக்களுக்கு அருள் பாலித்து வருகிறாள்.

  • மோடமங்கலம் - செல்லியம்மன்
        (உடன் செம்பன் கூட்டத்துக்கும்)


மோடமங்கலத்தில் செல்லி அம்மனாக அமர்ந்து அந்துவ குல மக்களுக்கு அருளும் நலமும் சேர்த்து வருகிறாள் அன்னை.
  • கோவில்பாளையம் - கவையகாளியம்மன்
        (உடன் பவளன் கூட்டத்துக்கும்)


கோவில்பாளையத்தில் கவைய காளியம்மனை வழிபட்டு சீரும் சிறப்புமாய் அந்துவ குலத்தினர் வாழ்ந்து வருகின்றனர்.


  • அஞ்சியூர் - அழகுநாச்சியம்மன்
          (உடன் செல்லன் கூட்டத்தார்க்கும்)


நமது பழமையான காணிகளில் ஒன்றான அஞ்சியூரில் (தற்போது அஞ்சூர்) அந்துவ கூட்ட மக்கள் அழகுநாச்சி தாயாரை குல தெய்வமாக வழிபட்டு வருகின்றனர்.

காணிகள் பலவாயினும் நமது முன்னோர் வழிவழியாய் வழிபட்டு வந்த காணிக்குச் சென்று வழிபடுவதே உத்தமம். வருடம் ஒரு முறையேனும் குலதெய்வத்தை தரிசித்து வணங்கி வழிபட்டு வருதல் வாழ்வில் மேன்மையை அளிக்கும்.

அந்துவன் கூட்டமும் காணியாட்சிகளும்

கொங்க வெள்ளாளர் கோத்திரங்களில் முதன்மையானது அந்துவன் கூட்டம் ஆகும். குலகோத்திரம் உரைக்கும் அனைத்து வகை சமூக ஆவணங்களிலும் அந்துவர் பெயர் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது ஆகும்.

அந்துவன் என்னும் பெயர்ச் சொல் தலைவன் என்று பொருள்படும் அந்தை என்னும் சொல்லோடு தொடர்புடையது ஆகும்.

தொல்லியல் துறை மேற்கொண்ட அகழ்வாய்வுகளில் கிடைக்கப் பெற்ற முதுமக்கள் தாழிகளிலும், மட்பாண்டங்களிலும், கல்வெட்டுகளிலும் அந்துவன், ஆந்தை, செம்பன், மணியன், கன்னன், பண்ணன் என பல கொங்கர் கூட்டப் பெயர்கள் காணப்படுகின்றன என்பது சிறப்பாகும். இப்பழமையான பெயர்கள் சங்க காலத்திலும், அதற்கு முன்னரும் வழக்கில் இருந்ததற்கு பல இலக்கிய, கல்வெட்டு, அகழ்வாராய்ச்சி சான்றுகள் உள்ளன. இத்தகைய பழமையான கோத்திரப் பெயர்கள் கொங்க வெள்ளாளரிடையே மட்டும் வழங்கி வருவது தனிச்சிறப்பாகும்,

காணி :

காணி என்பது கங்கா குலத்தவர் காலம் காலமாக நிலைத்து வாழ்ந்து வரும் இடங்கள் ஆகும். இவை மூவேந்தர்களால் உரிமையாக அளிக்கப்பட்டவை. காணி ஊர்கள் என்றும் காணியாட்சி என்றும் அழைக்கப்படும்.

ஒரு காணியைச் சேர்ந்த கோத்திரத்தார் அக்காணியாட்சியின் காணியாளர் எனப்படுவர். காணிக்கு உட்பட்டு நடக்கும் அனைத்து காரியங்களுக்கும் காணியாளர்களே அதிகாரிகள் ஆவர். காணி தோறும் காணியாட்சி கோவிலும்(குல தெய்வம்), சிவன் கோவிலும், காவல் தெய்வமும் அமைத்து நம் முன்னோர் வழிபட்டு வந்தனர்.

கொங்க வெள்ளாளரில் முதன்மையான கூட்டங்களில் ஒன்றாக விளங்கும் நம் அந்துவன் கூட்டம் கொங்க நாட்டின் பழமையான வம்சாவளிகளில் ஒன்றாகும். "சவுரியம் மிகு அந்துவன் குலம்" என்று கொங்கு வெள்ளாளர் குலத்துப் பாடல் அந்துவனை சிறப்பித்து சொல்லும்.

அந்துவன் கூட்டத்தினர் சிறப்போடு வாழ்ந்த நம் பழங்காணிகள் யாவை என்று பார்ப்போம்.

கல்வெட்டுகள், செப்பேடுகள், காணிப்பாடல், தனிப்பாடல் ஆகியவற்றின் மூலம் அறியப்படும் அந்துவன் குலத்தார் காணிகள் 26 ஆகும்.

அவை:

  • அஞ்சூர் 
  • கீரனூர்
  • தெக்கலூர்
  • அந்தியூர் 
  • குந்தாணி
  • தோட்டாணி
  • அலைவாய்ப்பட்டி
  • குன்னத்தூர்
  • நாகம்பள்ளி
  • ஆதியூர்
  • கொடையூர்
  • பாலமேடு
  • ஆரியூர்
  • செவியூர்
  • பூந்துறை
  • இராசியூர்
  • சேவூர்
  • மூடுதுறை
  • இருப்புலி
  • திருச்செங்கோடு
  • மோடமங்கலம்
  • இலக்காபுரம்
  • திருவாச்சி
  • வாய்ப்பாடி
  • ஊஞ்சலூர்
  • தூரம்பாடி

இதுவரை அந்துவன் கூட்டத்தார்க்கு இரண்டு காணிப் பாடல்கள் கிடைக்கப்பெற்றுள்ளது.

காணிப்பாடல் 1:

சீருலவு நாகநகர் கீரனூர் ஆதியூர்
       செப்பரிய மோடமங்கை
திகழ்அஞ்சி யூர்பாலை மேடுதூ ரம்பாடி
       சித்திரவீதிக் கோதையூர்
ஏருலவு வடகரை நன்னாட்டில் அந்தியூர்
        இனியலக் காபுரமுடன்
எழில்பரவு தோட்டாணி மேவுசெவி யூருடன்
        இனிதான வாய்ப்பாடியூர்
காருலவு முடுதுறை நன்னகர் திருவாச்சி
         கனககொடை யூருமிகவும்
காவேரி சூழுமேல் அரையநன் னாட்டினில்
         கதிபெருகும் ஊஞ்சலூரும்
ஆரமணி மேடை திகழ் பூந்துறைசை தெக்கலூர்
          அதிகசே வூருகுன்றை
அந்துவ குலத்தில்வரு மோழைசெல்லப்பனே
         அடையவர்கள் பணிசிங்கமே!

இப்பாடல் 21 ஊர்களை அந்துவன் காணியாட்சிகளாக சொல்கின்றது. அவை:

நாகம்பள்ளி, கீரனூர், ஆதியூர், மோடமங்கலம், அஞ்சூர் பாலமேடு, தூரம்பாடி, திருச்செங்கோடு, அந்தியூர், லக்காபுரம், தோட்டாணி, செவியூர், வாய்ப்பாடி,முடுதுறை, திருவாச்சி, கொடையூர், ஊஞ்சலூர், பூந்துறை, தெக்கலூர், சேவூர், குன்னத்தூர்

காணிப்பாடல் 2:

நன்னிலம் புகழ்கின்ற நாகம்பள்ளி கீரனூர்
       நற்பால மேடு அதுவும்
நளினமுள லக்கா புரத்துடன் திருவாச்சி
       நலகுந்தி ஆதியூரும்
சென்னெல்வயல் சூழ்நிலை மோடமங் கலமதும்
       செழித்ததூ ரம்பாடியும்
செயமருவு அஞ்சியூர்ப் பதியுடன் மிக்கவாம்
       செப்பமுள காணிபெற்றாய்
சொன்னமொழி தவறாத அந்துவ குலத்தில்வரு
       சுகசரண கெம்பீரனே
சுந்தர மடந்தையர்கள் விரதமத ரூபனே
       சொற்பனுட மகமேருவே
தன்மையது வாகவே நம்புலவன் என்று நீ
       தாபரித் திடும்பவுளித்
தாட்டீக சென்னியருள் செல்லமகி பாலனே
       தாடளர் பரிநகுலனே!

இரண்டாம் பாடல் குந்தாணி என்னும் ஊரையும் சேர்த்து நமது காணியாகச் சொல்கிறது.

கொங்க வெள்ளாளர் கோத்திரங்கள்

கோத்திரம் என்பது ஆண் வழி மரபினைக் குறிக்கும் வம்சாவளி மரபு ஆகும். இது தொன்முதிர்குடிகளுக்கே உரிய உயரிய பண்பாடு.
தனது வம்சத்தின் முதல்வனைக் கொண்டு வழிவழியாய் வந்த அவன் வம்சத்தின் மக்களை அவனது கோத்திரம் என்பர். இவை பல்கிப் பெருகி கிளைப்பதும் உண்டு.

கொங்க வெள்ளாளர் கங்கையின் மைந்தராரய் பிறந்து பெருகியதால் கங்கா குலத்தினர் ஆவர்.

கொங்க வெள்ளாளர் கோத்திரத்தை குலம் என்றும் கூட்டம் என்றும் அழைப்பர். கோத்திரப் பெயரோடு குலம் எனப்படுதலும், கூட்டம் என்று அழைப்பதும் அக்கோத்திரத்தாரின் பெருக்கம் பற்றியதாகும். கம்பர் காலத்தில் வெள்ளாளர்களுக்கு மூவேந்தர் முன்னிலையில் கோத்திரம் வகுத்து காணிகள் அமைக்கப்பட்ட செய்திகள் கிடைக்கப்பெறுகின்றன.

ஒரே கோத்திரத்தில் பிறந்தோர் அண்ணன், தம்பி, பங்காளி, தாயுதுகாரர் ஆவர்.

அதே போல கங்கா குலத்தைச் சேர்ந்த வேறு கோத்திரத்து மக்களை மாமன் மச்சினன் என்று உறவு பாராட்டுவதும் நமது பண்பாடு ஆகும்.

'குலம் அறிந்து கோத்திரம் அறிந்து பெண்ணைக் கொடு' என்பது பழமொழி.

தொல்காப்பியரும்...

"கற்பெனப் படுவது கரணமொடு புணரக்
கொளற்குரி மரபிற் கிழவன் கிழத்தியைக்
கொடைக்குரி மரபினோர் கொடுப்பக்கொள் வதுவே"

                                                            - தொல்காப்பியம் (பொருள், கற்பியல்-1)
எனக் கூறுகிறார்.

பொருள்:

கற்பு எனப்படுவது திருமணத்தோடு இணைய
கொள்ளும் உரிமை உடைய மரபைச் சேர்ந்த ஆண்மகன் பெண்ணைக்
கொடுக்கும் உரிமை உடைய மரபைச் சேர்ந்தவர் கொடுக்கக் கொள்வது ஆகும்.

திருமணத்தின் போது குலம் கோத்திரம் அறிந்து திருமணம் செய்யும் பொருட்டே குலங்கோதுதல்(குலம்+கோத்திரம் ஓதல்) என்னும் தனி சீர் கொங்க வெள்ளாளரில் உண்டு.

அதே போல கோயிலில் அர்ச்சனை செய்யும் போதும், தென்புலத்தாருக்கு (இறந்துபட்ட முன்னோர்) சிரார்த்தம் செய்யும்போதும் (திதி கொடுத்தல்) குலம் கோத்திரம் சொல்லியே செய்யப்படுவது முறையாகும்.

நற்குடியாம் கங்கா குலத்தில் கோத்திரங்கள் பலவாம். 
கம்பர் வதுவை வரிப் பட்டயம் 64 கோத்திரங்கள் என தெரிவிக்கிறது.அழகுமலைக் குறவஞ்சி 141 கூட்டப்பெயர்களைப் பட்டியலிடுகிறது.  இன்று கிடைக்கும் ஆதாரங்களின்படி 60க்கும் மேற்பட்ட கூட்டங்கள் காணியாட்சிக் கோயில்களுடன் இனங்க்கானப்பட்டு செந்தலை வெள்ளாளர் என்று உறுதி செய்யப்பட்டுள்ளனர்.

கொங்க வெள்ளாளர் (செந்தலை/தென்திசை வெள்ளாளர்) - 

குலம் - கங்கா குலம்.

கோத்திரங்கள்:

1அழகன்
2அந்துவன்
3ஆந்தை
4ஆவன்
5ஆதி
6ஆடன்
7ஈஞ்சன்
8எண்ணன்/எண்ணை
9ஒழுக்கன்
10ஓதாளன்
11கணக்கன்
12கணவாளன்
13கன்னன்
14கன்னந்தை
15கல்லி
16காரி
17காடன்/காடை
18கீரன்/கீரை
19குழாயன்
20கூரன்/கூரை
21கோவேந்தன்
22சாத்தந்தை
23செங்கண்ணன்
24செங்குன்னி
25செம்பன்
26செம்பூதன்
27செல்லன்
28செவ்வாயன்
29செவ்வந்தி
30சேரன்
31சேரலன்
32சேடன்
33தனஞ்செயன்/தழிஞ்சி
34தூரன்
35தேவந்தை/தேவேந்திரன்
36தோடன்
37நீருண்ணியன்
38பனங்காடன்
39பண்ணன்/பண்ணை
40பதறியன்
41பவளன்
42பயிரன்
43பதுமன்
44பணையன்
45பாண்டியன்
46பில்லன்/புல்லன்
47பிறழந்தை/பொருள்தந்தான்
48பூசன்
49பூச்சந்தை
50பூந்தை
51பெரியன்
52பெருங்குடி
53பொன்னன்
54மணியன்
55மாடன்
56முத்தன்
57முல்லை
58முழுக்காதன்
59மேதி
60வண்ணக்கன்
61வாணன்
62விளையன்
63வில்லி
64விழியன்
65வெண்டுவன்
66வெள்ளம்பன்
67வேந்தன்

ஒரு கோத்திரத்தைச் சேர்ந்த மக்களில் ஒரு பிரிவினர் ஒரு சில காரணங்களால் பிற்காலத்தில் வேறு இடம் சென்றோ வேறு சில காரணங்களாலோ சிறப்பு பெயர் பெற்றிருந்தாலும் பங்காளிகளாகவே கருதப்படுவர்.
உதாரணம்: கன்னன் - கன்னந்தை, முழுக்காதன்-பிறழந்தை/பொருள்தந்தான், சாத்தந்தை-பூச்சந்தை.

அதே போல "கொழுக்கட்டைக்கு தலவு இல்ல; கொங்கனுக்கு முறைமயில்ல" என்று ஒரு பழமொழி வழங்குகிறது. அதாவது ஒரு கூட்டத்தாருக்கு இன்னொரு கூட்டத்தைச் சேர்ந்த குடும்பம் திருமண உறவுகளால் ஒரு வகையில் சித்தப்பன் ஆகிறது, இன்னொரு வகையில் மாமனும் ஆகிறது. அதனால் கூட்டம் வேறு என்றால் அந்தக் குடும்பத்தில் பெண் கட்டலாம் என்பது வழக்கமாகும். அதனைப் பகர வந்ததே இந்த பழமொழியாகும்.

ஆனால் அதே நேரம் தாயின் உடன்பிறந்த சகோதரிமார்கள் இன்னொரு தாய் என்ற வகையில் அவர்களின் பெண்கள் நமக்கும் சகோதரிகளாவே போற்றப்படும் வழக்கம் இன்றும் பேணப்படுகிறது.

கொங்க வெள்ளாள கவுண்டர்

பண்டைய தமிழகத்தில் சேர, சோழ, பாண்டிய, கொங்கு, தொண்டை என ஐந்து மண்டலங்கள் இருந்தன. மண்டலங்கள் என்பன ஆறு, மலை, தட்பவெட்ப வகைப்பாடுகளால் ஒன்றுக்கொன்று வேறுபட்டு அமைந்த தன்னிறைவான பழமையான பகுதிகள் ஆகும். கொங்க வெள்ளாள கவுண்டர்கள் கொங்கு மண்டலத்தில் வசித்து வரும் உழவை முதல் தொழிலாகக் கொண்ட பழங்குடிகள் ஆவர். கொங்க தேசம் சேரரின் பகுதியாகவே ஆதிகாலந்தொட்டு விளங்கியது. கொங்கன் என்றாலே அது சேரனைக் குறிப்பதாகும்.

ஆதியிலே தேவர்கள், ரிஷிகள், மனிதர்களெல்லாம் பசியால் வாடியிருந்த காலத்து ஈசனிடம் சென்று பசிப் பிணி நீக்க வேண்டினர். ஈசன் தன் பார்வையால் விஷ்ணுவிடம் குறிப்பறிவித்தார். விஷ்ணு தனது அம்சங்களில் ஒன்றை பூமிக்கு அனுப்பி கங்கையின் கரையில் அவளுக்கு மகனாகத் தோன்றினார். ஈசனிடம் அன்பினவனாக, கையில் ஏருடனும் பஞ்சாட்சரம் செபிக்கும் வாயுடனும் மிகுந்த அழகினனாக உலகில் வஞ்சனையை ஒழிக்கும்படிக்கு மரபாளன் தோன்றினான் என்று வேளாள புராணம் பாடுகிறது.

காங்கேயன் (கங்கையின் புதல்வன்), முர்தகபாலன் (ஏரினைக் காப்போன்), பூபாலன் (பூமியினைக் காப்பவன்) என்று பேர்கள் பெற்றான். அவனுக்கு குருவாக இருந்து சகல கலைகளும் அறிவித்தார் போதாயன மகரிஷி. பின்னர் கங்கை தன் குலம் தழைக்க இந்திரன் புதல்வியையும், குபேரன் புதல்வியையும் மணம் முடித்து வைத்து புத்திர சம்பத்தும் வம்ச விருத்தியும் பெற்று, கோத்திரம் சூத்திரம் வகுத்து சீர் முறைகள் வகுத்து வழிவழியாய் கடைபிடித்து வரலாயினர்.

வெள்ளத்தை ஆளும் தன்மையால் வெள்ளாளர் என்றும், மழை நீரை ஆளும் தன்மையால் காராளர் என்றும், உலகோர் தொழில் நடக்க அவர் தம் பசியறுத்து உதவ இவர் தம் தொழில் நடத்துவதால் வேளாளர் எனவும் அழைக்கப்பட்டனர். குடியாகிக் கோத்திரம் வகுத்து கூடி வாழ்ந்ததால் நற்குடி நாற்பத்தெண்ணாயிரம் என்றும் பெறலாயினர்.

கங்கை குலத்தார் ஏர்கொண்டு பார் உழும் பூவசியம், ஆநிரை ஓம்பும் கோவசியம், இவற்றால் பொருளீட்டும் தனவசியம் என்னும் மூவைசியத் தொழிலுக்கும் உரியவர் ஆவர். பழமையான நிகண்டுகள் வேளாளரை குறுநில ஆட்சிக்குரிய வேளிர், இளங்கோக்கள் என்றும் உழுவித்துண்ணும் வைசியரென்றும், உழுதுண்ணும் நான்காம் பாலினர் என்றும் வகைப்படுத்துகிறது.

வேளிர், பூபாலர், இளங்கோக்கள், கங்கை குலத்தரசர், களமர், உழவர், ஏர் வாழ்நர், மேழியர், விளைப்பவர், பெருக்காளர், பார்மைந்தர், காராளர், வேளாளர், கொடையினர், சதுர்த்தர், வார்த்தையாடலில் வல்லோர், தாளினில் வந்தவர் என்பன நிகண்டுகளால் அறியப் படும் வேறு பெயர்கள் ஆகும்.

கல்வெட்டுகளில் வெள்ளாளர் என்றே பயின்று வரும். சோழர் ஆட்சியின் கீழ் அவர் எழுதிட்ட மெய்கீர்த்திகள் வெள்ளாளர் தம் வீரத்தையும் கொடையையும் பக்திச் சிறப்பையும் மேன்மையையும் புகழ்வனவாகும்.

வேள், காமிண்டன், முதலி, அரயன் என்பன வழிவழியாய் கொங்க வெள்ளாள மரபினர் தரித்து வந்த பட்டங்கள் ஆகும். உடையார், ஆள்வான் என்ற பட்டத்துடனும் சிலர் விளங்கியுள்ளனர். இவற்றுள் காமிண்டன் என்றால் 'காக்கும் வீரன்' எனப்பொருள் படும். காமிண்டன் என்பதே பின்னாளில் கவுண்டன் எனத் திரிபுற்றது என்பர். கொங்கு நாட்டு வெள்ளாளரை கவுண்டர் என்று அழைப்பது இது பற்றியே ஆகும்.

கொங்க வேளாளர் என்றாலே பெரும்பான்மையாக வசிக்கும் செந்தலை கவுண்டர்-தென்திசை வெள்ளாளர்களைக் குறிக்கும். பால வெள்ளாளர்(ஒற்றைச் சங்கு-இரட்டைச் சங்கு வெள்ளாளர்), படைத்தலைக் கவுண்டர்நரம்புகட்டி வெள்ளாளர் (வடகரை வெள்ளாளர்) முதலியோரும் கொங்க நாட்டில் வசிக்கும் வெள்ளாளர்கள் ஆவர். அவர்களும் நமக்குத் தொடர்புடையவரே ஆயினும் அவர்களுடன் கொண்டு கொடுத்துக் கட்டும் மணவினைகள் இல்லை. அவர்களும் கொங்க வெள்ளாளர் என்றே அழைக்கப்படுவர்.

கணபதி வணக்கம்




                            நல்ல கணபதியை நாளும் தொழுதக்கால்
                            அல்லல்வினை எல்லாம் அகலுமே - சொல்லரிய
                            தும்பிக்கை யானைத் தொழுதால் வினைதீரும்
                            நம்பிக்கை உண்டே நமக்கு.



சம்பிரமிகு கீரனூர் தன்னில்வளர் ஆதியை
சவுரியம்மிகு அந்துவகுலனை
தன்னில்வளர் காடையைக் கீரனை விலையனை
தர்மமிகு தேவேந்திரனை
நாளும் இரட்சித்தருளும் செல்லப்பிள்ளையாரும்
சீர்கொண்ட வடிவுற்ற ஆதீச லிங்கரும்
தேவிஅகி லாண்டவல்லி
செந்தில்வடி வேல்முருகர் கந்தவேள் குமரனே
தெண்டா யுதக்கந்தனே
கார்கொண்ட கருணைபுரி செல்லாண்டி யம்மையும்
கருப்பண்ண சுவாமியாரும்
கரியகுழல் பேச்சியும் துக்காச்சி  அம்மனும்
கருணை விண்ணப்பம் செய்வோமே!

யது குல சேரர் (எனும்) வஞ்சி வேள் அந்துவர்

௳ தமிழகத்தின் மூவேந்தர்களான சேர சோழ பாண்டியரை முறையே அக்னி வம்ச, சூரிய வம்ச, சந்திர வம்சம் என்று சொல்வதுண்டு. இதில் சேரர்களை அக்னி வம்சம் என...