புதன், 31 ஆகஸ்ட், 2016

அந்துவன் கூட்டமும் காணியாட்சிகளும்

கொங்க வெள்ளாளர் கோத்திரங்களில் முதன்மையானது அந்துவன் கூட்டம் ஆகும். குலகோத்திரம் உரைக்கும் அனைத்து வகை சமூக ஆவணங்களிலும் அந்துவர் பெயர் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது ஆகும்.

அந்துவன் என்னும் பெயர்ச் சொல் தலைவன் என்று பொருள்படும் அந்தை என்னும் சொல்லோடு தொடர்புடையது ஆகும்.

தொல்லியல் துறை மேற்கொண்ட அகழ்வாய்வுகளில் கிடைக்கப் பெற்ற முதுமக்கள் தாழிகளிலும், மட்பாண்டங்களிலும், கல்வெட்டுகளிலும் அந்துவன், ஆந்தை, செம்பன், மணியன், கன்னன், பண்ணன் என பல கொங்கர் கூட்டப் பெயர்கள் காணப்படுகின்றன என்பது சிறப்பாகும். இப்பழமையான பெயர்கள் சங்க காலத்திலும், அதற்கு முன்னரும் வழக்கில் இருந்ததற்கு பல இலக்கிய, கல்வெட்டு, அகழ்வாராய்ச்சி சான்றுகள் உள்ளன. இத்தகைய பழமையான கோத்திரப் பெயர்கள் கொங்க வெள்ளாளரிடையே மட்டும் வழங்கி வருவது தனிச்சிறப்பாகும்,

காணி :

காணி என்பது கங்கா குலத்தவர் காலம் காலமாக நிலைத்து வாழ்ந்து வரும் இடங்கள் ஆகும். இவை மூவேந்தர்களால் உரிமையாக அளிக்கப்பட்டவை. காணி ஊர்கள் என்றும் காணியாட்சி என்றும் அழைக்கப்படும்.

ஒரு காணியைச் சேர்ந்த கோத்திரத்தார் அக்காணியாட்சியின் காணியாளர் எனப்படுவர். காணிக்கு உட்பட்டு நடக்கும் அனைத்து காரியங்களுக்கும் காணியாளர்களே அதிகாரிகள் ஆவர். காணி தோறும் காணியாட்சி கோவிலும்(குல தெய்வம்), சிவன் கோவிலும், காவல் தெய்வமும் அமைத்து நம் முன்னோர் வழிபட்டு வந்தனர்.

கொங்க வெள்ளாளரில் முதன்மையான கூட்டங்களில் ஒன்றாக விளங்கும் நம் அந்துவன் கூட்டம் கொங்க நாட்டின் பழமையான வம்சாவளிகளில் ஒன்றாகும். "சவுரியம் மிகு அந்துவன் குலம்" என்று கொங்கு வெள்ளாளர் குலத்துப் பாடல் அந்துவனை சிறப்பித்து சொல்லும்.

அந்துவன் கூட்டத்தினர் சிறப்போடு வாழ்ந்த நம் பழங்காணிகள் யாவை என்று பார்ப்போம்.

கல்வெட்டுகள், செப்பேடுகள், காணிப்பாடல், தனிப்பாடல் ஆகியவற்றின் மூலம் அறியப்படும் அந்துவன் குலத்தார் காணிகள் 26 ஆகும்.

அவை:

  • அஞ்சூர் 
  • கீரனூர்
  • தெக்கலூர்
  • அந்தியூர் 
  • குந்தாணி
  • தோட்டாணி
  • அலைவாய்ப்பட்டி
  • குன்னத்தூர்
  • நாகம்பள்ளி
  • ஆதியூர்
  • கொடையூர்
  • பாலமேடு
  • ஆரியூர்
  • செவியூர்
  • பூந்துறை
  • இராசியூர்
  • சேவூர்
  • மூடுதுறை
  • இருப்புலி
  • திருச்செங்கோடு
  • மோடமங்கலம்
  • இலக்காபுரம்
  • திருவாச்சி
  • வாய்ப்பாடி
  • ஊஞ்சலூர்
  • தூரம்பாடி

இதுவரை அந்துவன் கூட்டத்தார்க்கு இரண்டு காணிப் பாடல்கள் கிடைக்கப்பெற்றுள்ளது.

காணிப்பாடல் 1:

சீருலவு நாகநகர் கீரனூர் ஆதியூர்
       செப்பரிய மோடமங்கை
திகழ்அஞ்சி யூர்பாலை மேடுதூ ரம்பாடி
       சித்திரவீதிக் கோதையூர்
ஏருலவு வடகரை நன்னாட்டில் அந்தியூர்
        இனியலக் காபுரமுடன்
எழில்பரவு தோட்டாணி மேவுசெவி யூருடன்
        இனிதான வாய்ப்பாடியூர்
காருலவு முடுதுறை நன்னகர் திருவாச்சி
         கனககொடை யூருமிகவும்
காவேரி சூழுமேல் அரையநன் னாட்டினில்
         கதிபெருகும் ஊஞ்சலூரும்
ஆரமணி மேடை திகழ் பூந்துறைசை தெக்கலூர்
          அதிகசே வூருகுன்றை
அந்துவ குலத்தில்வரு மோழைசெல்லப்பனே
         அடையவர்கள் பணிசிங்கமே!

இப்பாடல் 21 ஊர்களை அந்துவன் காணியாட்சிகளாக சொல்கின்றது. அவை:

நாகம்பள்ளி, கீரனூர், ஆதியூர், மோடமங்கலம், அஞ்சூர் பாலமேடு, தூரம்பாடி, திருச்செங்கோடு, அந்தியூர், லக்காபுரம், தோட்டாணி, செவியூர், வாய்ப்பாடி,முடுதுறை, திருவாச்சி, கொடையூர், ஊஞ்சலூர், பூந்துறை, தெக்கலூர், சேவூர், குன்னத்தூர்

காணிப்பாடல் 2:

நன்னிலம் புகழ்கின்ற நாகம்பள்ளி கீரனூர்
       நற்பால மேடு அதுவும்
நளினமுள லக்கா புரத்துடன் திருவாச்சி
       நலகுந்தி ஆதியூரும்
சென்னெல்வயல் சூழ்நிலை மோடமங் கலமதும்
       செழித்ததூ ரம்பாடியும்
செயமருவு அஞ்சியூர்ப் பதியுடன் மிக்கவாம்
       செப்பமுள காணிபெற்றாய்
சொன்னமொழி தவறாத அந்துவ குலத்தில்வரு
       சுகசரண கெம்பீரனே
சுந்தர மடந்தையர்கள் விரதமத ரூபனே
       சொற்பனுட மகமேருவே
தன்மையது வாகவே நம்புலவன் என்று நீ
       தாபரித் திடும்பவுளித்
தாட்டீக சென்னியருள் செல்லமகி பாலனே
       தாடளர் பரிநகுலனே!

இரண்டாம் பாடல் குந்தாணி என்னும் ஊரையும் சேர்த்து நமது காணியாகச் சொல்கிறது.

1 கருத்து:

தங்கள் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன ...

யது குல சேரர் (எனும்) வஞ்சி வேள் அந்துவர்

௳ தமிழகத்தின் மூவேந்தர்களான சேர சோழ பாண்டியரை முறையே அக்னி வம்ச, சூரிய வம்ச, சந்திர வம்சம் என்று சொல்வதுண்டு. இதில் சேரர்களை அக்னி வம்சம் என...